தி ஃபேமிலி மேன் 2 தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ. 3-4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தி ஃபேமிலி மேன் 2

-2

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா உள்ளிட்டோர் நடித்த தி ஃபேமிலி மேன் 2 இந்தி வெப் தொடர் கடந்த 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. அந்த தொடரில் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தி ஃபேமிலி மேன் 2 தொடரை உடனே நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். முன்னதாக தி ஃபேமிலி மேன் 2 தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

சமந்தா

தி ஃபேமிலி மேன் 2 தொடரில் நடிக்க சமந்தாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பள விபரம் வெளியாகியிருக்கிறது. தி ஃபேமிலி மேன் 2 தொடரில் ஸ்ரீகாந்த் திவாரியாக நடிக்க மனோஜ் பாஜ்பாய்க்கு ரூ. 10 கோடியும், சமந்தாவுக்கு ரூ. 3-4 கோடியும், மனோஜின் மனைவியாக நடிக்க ப்ரியாமணிக்கு ரூ. 80 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளதாம். சென்னை பெண்ணாக இருந்து கொண்டு சமந்தா இப்படி ஒரு தொடரில் நடித்திருக்கிறாரே என்று பலரும் அவரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அந்த தொடரில் நடித்தது பற்றி சமந்தா இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்தார்.

ராஜி

அனைத்து விமர்சனங்கள் மற்றும் கமெண்ட்டுகளை படித்துப் பார்த்து என் மனம் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜி எப்பொழுதுமே ஸ்பெஷல். அந்த கதாபாத்திரத்தில் நடிக்குமாறு ராஜ் மற்றும் டிகே என்னை அணுகியபோது, ராஜியின் கதாபாத்திரத்திற்கு சென்சிடிவிட்டி மற்றும் பேலன்ஸ் தேவை என்பது எனக்கு தெரியும். ஈழப் போரில் பெண்கள் பட்ட பாடு முதல் தமிழர்களின் போராட்டம் குறித்த ஆவணப் படங்களை கிரியேட்டிவ் குழு அளித்தது. அந்த ஆவணப் படங்களை பார்த்தபோது ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் பட்ட கஷ்டங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த ஆவணப் படங்களுக்கு சில ஆயிரம் வியூஸ் தான் இருந்தது என்றார் சமந்தா.

ஈழம்

ஈழத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்ததை இந்த உலகம் கவனிக்கவில்லையே என்பது அப்பொழுது தான் எனக்கு தோன்றியது. மேலும் லட்சக் கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் வீடுகளை இழந்தார்கள். போரினால் ஏற்பட்ட காயத்தை மனதில் சுமந்து கொண்டு பலர் தூர தேசங்களில் வாழ்கிறார்கள். போரில் இறந்தவர்கள் மற்றும் அதன் துயர நினைவுகளுடன் வாழ்பவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் தான் ராஜியின் கதை எனக்கு தெரிகிறது. நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து வெறுப்பு, பேராசை, அடக்குமுறையை எதிர்த்து போராட ஒன்று சேர வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக ராஜியின் கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நாம் ஒன்றிணையத் தவறினால் மேலும் பலர் அங்கீகாரம், சுதந்திரத்தை இழப்பார்கள் என்று சமந்தா இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.