பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பா.ரஞ்சித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது‘ என தலைப்பிடப்பட்டுள்ளது.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி உள்ளார் ரஞ்சித். சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக ஆர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர். வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அண்மையில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

சன் பிக்சர்ஸ் அறிவித்த சூர்யா பர்த்டே ட்ரீட்: கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை அணிகளைப் பற்றி அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் குத்துச் சண்டையில் மோதுவதை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆர்யாவின் 30 வது திரைப்படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘நட்சத்திரம் நகர்கிறது’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப்படம் முழுக்க முழுக்க காதலை மையபடுத்தி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்தி ஜாலியான காதல் படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.