ஹைலைட்ஸ்:

  • நடிகையர் திலகம் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவு.
  • இந்த திரைப்படத்தில் நடித்ததிற்காக தேசிய விருது பெற்றார் கீர்த்தி.
  • நடிகையர் திலகம் திரைப்படம் தொடர்பாக கீர்த்தி சுரேஷ் பதிவு.

2018-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இந்த படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்ததையொட்டி, நடிகையர் திலகம் படம் தொடர்பான தன்னுடைய நினைவுகளை, தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

‘நடிகையர் திலகம்’ சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் 2018-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க, மறைந்த நடிகை சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான், பத்திரிகையாளராக சமந்தா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்தனர். 2018-ம் ஆண்டு மே 9-ம் தேதி இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடித்ததிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

அழைத்தவன் எமன் என்று அறியாமல் சென்று விட்டாயே: மாறனின் மறைவு குறித்து வைரலாகும் கண்ணீர் பதிவு!
இந்நிலையில் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்ததையொட்டி ‘மகாநடி’ இயக்குநர் நாக் அஸ்வினிடம் தான் கேட்க நினைத்த கேள்விகள் அடங்கிய குறிப்பு ஒன்றை தன்னுடைய வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதில், ‘மது அருந்தும் காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறீர்கள்?’ ‘படத்தில் வயதான தோற்றத்துக்கான காட்சிகள் எத்தனை நேரம்?’ ‘கர்ப்பமான தோற்றம் இருக்கிறதா? எடை கூடுவது, இழப்பது அவசியமா?’ என்று ஒருசில கேள்விகளை அதில் எழுதியுள்ளார் கீர்த்தி.

இதைப் பகிர்ந்து இயக்குநர் நாக் அஸ்வினைக் குறிப்பிட்டிருக்கும் கீர்த்தி, “நாகி, நான் எதைத் தேடிப் பிடித்திருக்கிறேன் என்று பாருங்கள்! நீங்கள் கதை சொன்னபோது முதன்முதலில் நான் எழுதிய குறிப்புகள். என்ன ஒரு அற்புதமான பயணமாக இருந்தது” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.