நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் எடுத்து, விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜ் குந்த்ரா

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஆபாச படங்களை எடுத்து, சில ஆப்கள் மூலம் விநியோகம் செய்தது தொடர்பாக ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தில் ராஜ் தான் முக்கிய மூளையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ்

ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த நாக்ரலே உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆபாச படங்களை எடுத்து அதை ஆப்கள் மூலம் விநியோகம் செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை கிரைம் பிரிவில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாங்கள் மிஸ்டர் ராஜ் குந்த்ராவை கைது செய்துள்ளோம். அவர் தான் முக்கிய மூளையாக தெரிகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்

ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை எடுத்து விநியோகம் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று கமிஷனர் ஹேமந்த் மேலும் தெரிவித்துள்ளார். ராஜ் குந்த்ரா கைதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது

ஆபாச படம் தொடர்பாக இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்து கடந்த வாரம் மட்டும் 9 பேரை கைது செய்துள்ளனர். ஆபாச படங்களுக்காக நடிகர்களை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். ராஜ் குந்த்ரா மீது நடிகை பூனம் பாண்டே மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறாராம். தன் வீடியோக்களை ராஜ் குந்த்ரா சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக பூனம் தெரிவித்திருக்கிறார்.