World
oi-Vigneshkumar
காபூல்: ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு தான் அங்குத் தாலிபான் படையினர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர்.
அதன் பின்னர் பல மாதங்களாகவே அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது. உலக நாடுகளும் தாலிபான் அமைப்பை அங்கீகரிக்க தயங்குவதால், ஆப்கன் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

26 பேர் பலி
இப்போது ஆப்கன் மக்களுக்கு மற்றொரு அடியாக அங்கு நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் மேற்கு மாகாணமாக பாத்கிஸின் உள்ள காடிஸ் மாவட்டத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் உயிரிழந்ததாக அம்மாகாண செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

மீட்பு பணிகள்
அதேபோல இந்த நிலநடுக்கத்தால் அருகேயுள்ள முக்ர் மாவட்டத்தில் உள்ள வீடுகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகளை அம்மாகாணத்தில் உள்ள வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயரலாம்
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.. தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றிய பிறகு அந்நாட்டிற்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், ஏற்கனவே இந்த காடிஸ் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்முறை இல்லை
ஆப்கன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும். குறிப்பாக அங்குள்ள குஷ் மலைத்தொடர் யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளுக்கு அருகே அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டில், 7.5 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்டப் பாகிஸ்தான், ஆப்கானைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 280 பேர் கொல்லப்பட்டனர்.
English abstract
Heavy earthquake hit western Afghanistan. Afghanistan earthquake killed Atleast 26 other people.