விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். கொரோனா முதல் அலைக்குப் பின் திரையரங்கில் வெளியாகி, தியேட்டர் உரிமையாளர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளித்த இந்த திரைப்படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய சல்மான் கான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது

அண்மையில் சல்மான் கான் நடிப்பில் ரமலான் பண்டிகைக்கு ராதே – யுவர் மோஸ்ட் வான்டட் பாய் வெளியானது. பிரபுதேவா இயக்கிய இப்படம் நேரடியாக ஓடிடி மற்றும் டிடிஹெச் இல் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியானது. யுஎஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என சில நாடுகளில் திரையரங்குகளிலும் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை.

கொழுக் மொழுக்ன்னு இருந்தா தப்பா?: உருவ கேலி செய்த ரசிகர்களுக்கு நடிகை அட்வைஸ்!
இந்நிலையில், ராதே திரைப்படத்தின் தோல்வியில் இருந்து மீள மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி, வசூல் நிலவரங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தி ரீமேக் உறுதியாகியுள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வான்டட், பாடிகார்ட், கிக் என சல்மான் கானின் திரை வாழ்க்கையில் வெற்றி பெற்ற பல படங்கள் தென்னிந்திய படங்களில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவையே. அதனால், தற்போதைய தோல்வியிலிருந்து மீள மாஸ்டர் திரைப்படத்தின் ரீமேக்கை நாடியுள்ளார் சல்மான் கான். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.