சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்கள் உருவாகி வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கின்றன. இதில் ‘டாக்டர்’ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் டான் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் துவங்கியது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் டான் திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபிச்சக்கரவர்த்தி இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடேக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

ப்ப்பா நம்ம சிம்புவா இது!!: வைரலாகும் ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!
இந்நிலையில் பொள்ளாச்சியில் டான் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதே போல் இந்த படத்தில் நடிக்கும் குக்வித் கோமாளி சிவாங்கியும் சிவகார்த்திகேயன் உடன் இருக்கும் புகைப்படத்தை ‘உன்கூடவே பொறக்கணும்’பாடலுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘டான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதால், இந்த படமாவது திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.