ஹைலைட்ஸ்:

  • சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியானது ‘இனம்’ திரைப்படம்.
  • சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக ஒரு வாரத்தில் நிறுத்தப்பட்டது.
  • 7 ஆண்டுகள் கழித்து ஓடிடி வெளியாக உள்ளது ‘இனம்’ திரைப்படம்.

ஒரு பக்கம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஓடிடி தளங்கள் பெரும் தலைவலியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் இயக்குனர், தயாரிப்பளர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாட்டு இல்லை என்ற காரணத்தாலும் பல இயக்குனர்கள் தாங்கள் நினைத்ததை திரையில் காட்ட முடிகிறது என்ற மகிழ்ச்சியிலும் உள்ளனர். இந்நிலையில் 7 வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பிய திரைப்படம் ஒன்று தற்போது மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரைக் கதைக்களமாக கொண்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் ‘இனம்’. உகந்தா, கரண், சரிதா, கருணா. அனக்கி, ஷியாம் சுந்தர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் திரையிடப்பட்டது இனம் திரைப்படம்.

படம் திரையங்கில் வெளியாவதற்கு முன்னமே ஒரு சில ஈழத்தமிழர் ஆதரவு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத்தினர் படம் வெளியாவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக உறுதியளித்த படக்குழு, ஒருசில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டனர். ஆனாலும் ‘இனம்’ திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் எழுந்தன.

தடுப்பூசியும் போட்டாச்சு.. நிவாரணமும் வழங்கியாச்சு: கடமையை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதன்பின்னர் பலவித நெருக்கடிகளினால் படத்தின் விநியோகஸ்தரான இயக்குநர் லிங்குசாமி, படம் வெளியான ஒருவாரத்திற்குள்ளேயே படத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதன்படி மார்ச் 31ஆம் தேதி முதல் தமிழக திரையரங்குகள் அனைத்திலும் இருந்தும் ‘இனம்’ திரைப்படம் நிறுத்தப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது ‘இனம்’ திரைப்படம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இது தொடர்பாக அவர் தன்னுடைய பதிவில், ‘இனம்’ படத்தை பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக, விரைவில் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது. மேலும் தமிழக அரசின் முதல் டேக்ஸ் ஃபிரி படம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார் சந்தோஷ் சிவன்.