பிரபல நடிகர் சோனு சூதை பார்க்கும் போது தன் தந்தையின் நினைவு வருவதாக ஐஸ்வர்யா ராய் அவரிடம் கூறியிருக்கிறார்.

சோனு சூத்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் வில்லனாக நடித்து வரும் சோனு சூத் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், பொது மக்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு நிஜ வாழ்க்கையில் பலருக்கும் ஹீரோவாகிவிட்டார் சோனு சூத்.

உதவி

கொரோனா வைரஸ் பிரச்சனையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பலருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் சோனு சூத். மேலும் சமூக வலைதளங்கள் மூலம் உதவி கேட்டாலும் செய்கிறார். மருத்துவ செலவு, படிப்பு செலவு ஆகியவற்றையும் ஏற்கிறார். அதுவும் உதவி என்று கேட்ட வேகத்தில் சோனு உதவுவது தான் பலரையும் கவர்ந்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்

சோனு சூதின் பிறந்தநாளான இன்று அவர் முன்பு அளித்த பேட்டி பற்றி பேசப்படுகிறது. அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் படங்களில் நடித்திருக்கிறார் சோனு சூத். ஐஸ்வர்யா பற்றி சோனு கூறியதாவது, நான் ஜோதா அக்பர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தேன். ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது, உங்களை பார்க்கும்போது என் அப்பா நினைவு வருகிறது என்றார். அதில் இருந்து ஐஸ்வர்யா ராய் பாய்சாப் என்று தான் அழைப்பார் என்றார்.

அமிதாப் பச்சன்

புத்தா படத்தில் அமிதாப் பச்சன் என் அப்பாவாக நடித்தார். யுவா படத்தில் அபிஷேக் பச்சன் என் சகோதரராகவும், ஜோதா அக்பரில் ஐஸ்வர்யா ராய் என் சகோதரியாகவும் நடித்தார். அமிதாபுடனான முதல் காட்சியிலேயே நான் அவரை பிடித்து கீழே தள்ள வேண்டும். நான் மதிக்கும் ஒருவரை எப்படி தள்ளுவது என்று இயக்குநரிடம் கேட்டேன் என்றார் சோனு சூத்.