கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் பேச்சு பொருளாக இருப்பது வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் நீதிமன்றத்தை அணுகியதும், அதற்காக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பும் தான். இந்நிலையில் தன் குடும்பத்திற்கும் விஜய்க்குமான உறவை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் நாசர் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது யூடியூப் தளத்திற்காக நடிகர் நாசரை சமீபத்தில் பேட்டி ஒன்று எடுத்துள்ளார். அதில் தனது திரையுலக அனுபவம், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை அனைத்தை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது விஜய்க்கும் உங்கள் குடும்பத்திற்குமான உறவை பற்றி கூறுமாறு மனோபாலா கேட்டதற்கு மனம் திறந்து பேசியுள்ளார் நாசர்.

அதில், எனது முதல் மகன் நூரூல் ஹசன் பாசில் தீவிரமான விஜய் ரசிகர். சிறிது காலத்திற்கு முன்பு அவருக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று நடந்து கிட்டத்தட்ட உயிர் போகும் நிலை ஆனது. அதிலிருந்து தப்பித்த என் மகன் மொத்தமாக ஞாபக சக்தியை இழந்தார். ஆனால் என் மகனுக்கு ஞாபகம் இருக்க கூடிய ஒரே பெயர் விஜய் மட்டுமே. ஆரம்பத்தில் நாங்கள் அவருடைய நண்பர் பெயரைதான் விஜய் விஜய் என சொல்கிறார் என்று நினைத்தோம்.

சீனுராமசாமி படத்தில் இணையும் ஜிவி பிரகாஷ்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆனால், அதன் பின்பு தான் தெரிந்தது அது நடிகர் விஜய் என்று. அவரது பாட்டுகளை மட்டும் இன்றுவரை கேட்கிறார். இப்போது வீட்டிற்கு சென்றாலும் விஜய் பாட்டு ஓடி கொண்டிருக்கும். இந்த விஷயத்தை அறிந்த விஜய் என் மகன் பிறந்தநாள் அன்று, என் வீட்டிற்கு வந்து என் மகனுடன் இருந்து பேசி சென்றார். அவர் எங்கள் வீட்டில் ஒருவர் என்று அந்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் நாசர்.

இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை குறிப்பிட்டு நடிகர் நாசரின் மனைவி கமிலா, தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் விஜய்யை விமர்சித்து நீதிமன்ற தீர்ப்பு வந்த போது, அவர் ரசிகர்கள் விஜய் செய்த பல நல்ல காரியங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது விஜய் குறித்து நடிகர் நாசர் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.