‘ஜகமே தந்திரம்’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இதனை தொடர்ந்து அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் தான் இயக்கவுள்ள ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்த வதந்திகளுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வெளியான சமயத்தில் விமர்சன மற்றும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவை கைவிட்டார் செல்வராகவன். அதனை தொடர்ந்து செல்வராகவனின் பழைய படங்களை தேடி பார்த்து ரசிக்க ஆரம்பித்த ரசிகர்கள், ஆயிரத்தில் ஒருவன் பட மேக்கிங் குறித்து பிரம்மிப்பாக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்தனர். இதனால் இந்த படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதனை தொடர்ந்து பலரும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வேண்டும் என செல்வராகவனிடம் கேட்க ஆரம்பித்தனர்.

ஹன்சிகா பிறந்தநாள் கொண்டாட்டம்: கோலாகலமாக நிறைவு!
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு புதிய போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் செல்வராகவன். இதில் தனுஷ் நடிப்பதாகவும், படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முன் தயாரிப்பின் போது, எதிர்பார்த்ததை விட பட்ஜெட் கைமீறி சென்றதால், தயாரிப்பாளர் படத்தை கைவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின.

இதனால் கடுப்பான இயக்குனர் செல்வராகவன், தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘அந்த மர்மமான முன் தயாரிப்புப் பணிகள் எப்போது நடந்தன? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார்? தயவுசெய்து உங்களுக்கு செய்தி கொடுப்பவர்களிடம் கேட்கவும்” என பதிவிட்டுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு முன்பாக தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்‘ படத்தை செல்வராகவன் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.