ஜெய்பீம் படம் புகழ் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளை சந்தித்து பேசியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

ஜெய்பீம்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. போலீஸ் காவலில் இறந்த ராசாக்கண்ணுவின் மனைவி செங்கேணி போராடுவது தான் கதை. இந்நிலையில் நிஜத்தில் சித்ரவதை செய்யப்பட்டதால் இறந்த ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் தனக்கு 13 ஆண்டுகள் கழித்து நியாயம் கிடைத்ததாக கூறினார்.

ராகவா லாரன்ஸ்

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுப்பேன் என்று நடிகரும், இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து பார்வதி அம்மாளை சந்தித்து பேசி வீடு கட்ட நிதியுதவி அளித்திருக்கிறார். உங்களை பார்த்தால் என் பாட்டி நினைவு வருகிறது. அவர் உயிருடன் இல்லை. அவர் உங்கள் வடிவில் இருப்பது போன்று இருக்கிறது என்று கூறி பார்வதி அம்மாளிடம் ஆசி வாங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

சூர்யா

பார்வதி அம்மாளின் நலனுக்காக வங்கியில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்துக்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம் என சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆதரவு

ஜெய்பீம் தொடர்பாக சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்த திரையுலகினர், ரசிகர்கள், பொது மக்கள் என பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். #WeStandWithSuriya என்கிற ஹேஷ்டேகுடன் பலரும் தங்களின் ஆதரவை ட்விட்டரில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.