வாடிவாசல் படத்திற்காக காளை மாட்டுடன் பயிற்சி எடுக்கப் போகிறாா் சூர்யா என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். படத்தின் டைட்டில் லுக் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது. தலைப்பு மற்றும் அதன் லுக்கை பார்த்ததுமே இது கண்டிப்பாக தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்பது யாரும் சொல்லாமலேயே புரிகிறது.

சூர்யா

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் சூர்யா. இந்நிலையில் வாடிவாசல் படத்தில் நடிக்க வசதியாக காளையுடன் பயிற்சி எடுக்கப் போகிறாராம். சூர்யா இப்படி ஒரு முடிவு செய்ததில் ஆச்சரியம் இல்லை. முன்னதாக விருமாண்டி படத்திற்காக உலக நாயகன் கமல் ஹாசன் காளையுடன் பயிற்சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு

வாடிவாசல் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. படம் குறித்த அடுத்த அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் படத்தின் ஹீரோயின் யார் என்பது இதுவரை தெரியவில்லை. அதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

தாணு

வாடிவாசல் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அவர் 16 ஆண்டுகள் கழித்து சூர்யா படத்தை தயாரிக்கிறார். முன்னதாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார். அவரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.