மிர்ச்சி சிவா, யோகி பாபு நடிப்பில் காசேதான் கடவுளடா திரைப்படத்தை ரீமேக் செய்ய உள்ளார் இயக்குனர் ஆர். கண்ணன். இவர்கள் இருவரும் கலகலப்பு முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இணைந்து நடித்த இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சுமோ திரைப்படம் உருவாக்கி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது.

1972ம் ஆண்டு லட்சுமி, மனோரமா, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாநத், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்நிலையில் இந்த படத்தினை மிர்ச்சி சிவா, யோகி பாபு நடிப்பில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஆர்.கண்ணன். இந்த படத்தில் முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகி பாவும், மனோரமா கேரக்டரில் ஊர்வசியும் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. இதில் மிர்ச்சி சிவா, யோகி பாபுவுடன், பிரியா ஆனந்த், குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். கண்ணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

சமந்தா பாணியில் வெப்சீரிஸ் பக்கம் திரும்பும் நயன்தாரா?: விரைவில் படப்பிடிப்பு!
இந்நிலையில் காசேதான் கடவுளடா பட ரீமேக் குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் பேசும் போது, “மிகுந்த உற்சாகத்துடன் இன்று படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். நீண்ட கோவிட் பொதுமுடக்கக் காலத்திற்குப் பிறகு தொழில்நுட்பக் கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாகப் பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடிப் படமாக, மக்களின் மனதில் என்றென்றும் நிற்கும் ‘காசேதான் கடவுளடா’ படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்யவேண்டிய கடமையுணர்வு உள்ளது.

தங்களது அற்புத நடிப்பு, திறமை, நகைச்சுவை உணர்வால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக இப்படம் இருக்கும்” என தெரிவித்துள்ளார்..

மிர்ச்சி சிவா ராம்பாலா இயக்கத்தில் இடியட் மற்றும் சுமோ ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இதில் இடியட் இன்னும் ஓரிரு மாதங்களில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. கலகலப்பு முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுமோ திரைப்படத்தில் மிர்ச்சி சிவாவும், யோகி பாபுவும் இணைந்து நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.