ஹைலைட்ஸ்:

  • நடிகர் மாறன் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலமானார்
  • விஜய்யின் கில்லி படத்கில் நடித்தவர் மாறன்
  • கானா பாடல்கள் பாடுவதில் வல்லவர் மாறன்

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரும்பும் பக்கம் எல்லாம் கொரோனா பாதிப்பு, மரணம் பற்றி தான் பேச்சாக உள்ளது. மேலும் மருந்து கிடைக்கவில்லை, பெட் கிடைக்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் கதறுவதை பார்க்க முடிகிறது.

கொரோனா வைரஸால் நடிகர் மரணம், நடிகை மரணம், தயாரிப்பாளர் மரணம் என்று தினமும் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மரண செய்தி வந்திருக்கிறது.

விஜய்யின் கில்லி படத்தில் ஆதிவாசி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாறன். அவர் டிஷ்யூம், தலைநகரம், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவர் மாறன். அவர் கானா பாடல்களை பாடுவதில் வல்லவர். மேடை கச்சேரிகளில் கானா பாடல்கள் பாடி வந்திருக்கிறார்.

செங்கல்பட்டு நத்தம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் மாறன். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

மாறன் இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் இயக்குநர்கள் தாமிரா, கே.வி. ஆனந்த், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன் ஆகியோர் இறந்த நிலையில் மாறனும் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு திரையுலகினர் ரசிகர்களை வலியுறுத்தி வருகிறார்கள். தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் ஊசி போடுமாறு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. அந்த தயக்கத்தை போக்கவே மறைந்த நடிகர் விவேக் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என்று பேச்சு கிளம்பியது.

இதை பார்த்த மருத்துவர்களும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடனடியாக விளக்கம் அளித்தனர். தடுப்பூசிக்கும், விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்கள்.

சிவகார்த்திகேயன் பட இயக்குநர், 3 வயது மகளுக்கு கொரோனா