தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரின் இயக்கத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் மக்களால் வெகுவாக ரசிக்கப்படும் ஒரு திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படம் பற்றி எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘குஷி‘. தேனிசை தென்றல் தேவா இசையயில் வெளியான இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். 2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

விவேக், மும்தாஜ் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். விஜய்யின் சினிமா மார்க்கெட்டில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாகவும் குஷி திகழ்ந்தது. பாடல்கள், காட்சியமைப்புகள் என இப்போதும் குஷி திரைப்படத்திற்கேன தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குஷி திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் போதெல்லாம், அந்த திரைப்படம் குறித்து விஜய் ரசிகர்கள் சிலாகித்து பகிரும் பதிவுகள் வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருக்கும்.

பூம் பூம் மாட்டுக்காரருக்கு சமூக வலைத்தளம் மூலம் அடித்த ஜாக்பாட்: ஜிவி பிரகாஷுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
இந்நிலையில் நேற்றைய தினம் தொலைகாட்சியில் குஷி திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் எஸ்.ஜே.சூர்யாவை டேக் செய்து, வேற லெவல் படம் தலைவா! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது என தெரிவித்திருந்தனர். அதில் ஒருவர், ‘செல்போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே ‘குஷி படம் முடிஞ்சிருக்கும். ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது’ என்று எஸ்.ஜே.சூர்யாவைக் டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

அவரின் பதிவுக்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, ‘அப்படி எல்லாம் இல்லை. மன வலியில் இரண்டு பேருமே செல்போனைத் தொலைத்துவிட்டதாகக் காட்டினாப் போச்சு. நண்பர்களுக்கு மாறி மாறி போன் செய்தால், அவர்கள் “சிவா ஸ்டேஷனுக்குப் போய்விட்டான், ஜெனி ஸ்டேஷனுக்குப் போய்விட்டாள்” என்று சொல்வார்கள். அவ்வளவுதான். எது கிளைமாக்ஸ் காட்சியோ, அதற்கு ஏற்ப காட்சியை பில்டப் பண்ண வேண்டியதுதான்’ என்று தெரிவித்தார். இதையடுத்து அவரின் பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் ‘குஷி பார்ட் 2 எடுங்க சார்’ என வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.