ஹைலைட்ஸ்:

  • கொரோனாவிற்கு பலியான தெலுங்கு நடிகர்.
  • வைரலாகும் ராகுல் வோராவின் கடைசி பேஸ்புக் பதிவு.
  • டி நரசிம்மராவ் மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல்.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய இந்தியாவில் சுமார் 4 லட்சம் நபர்களும், தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் நபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . இந்நிலையில் கொரோனாவால் பிரபல தெலுங்கு நடிகர் மரணமடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள் மரணமடைவது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கொரோனாவிற்கு இயக்குனர்கள் கே.வி.ஆனந்த்யும், தாமிராவும் காலமானார்கள். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் டி நரசிம்மராவ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் டி நரசிம்மராவ் சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்தார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளான அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நரசிம்மராவ் காலமாகியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தவறவிட்ட பொக்கிசம் அம்மா: வெங்கட்பிரபுவிற்கு ஆறுதல் தெரிவித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்!
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ராகுல் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பிரபலமான நடிகர் ராகுல் வோராவும் கொரோனா தொற்று காரணமாக நேற்று காலை மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ராகுல் தனது பேஸ்புக் பக்கத்தில், எனக்கு நல்ல சிகிச்சை கிடைத்திருந்தால் என்னை காப்பாற்றியிருக்க முடியும். நான் மீண்டும் பிறந்து வருவேன் மற்றும் சில நல்ல காரியங்களை செய்வேன். தற்போது எனக்கு நம்பிக்கை எல்லாம் சுத்தமாக போய்விட்டது என்று பதிவிட்டிருந்தார்.

கொரோனா பரவல் காரணமாக திரையுலகை சார்ந்த கலைஞர்கள் பலர் அடுத்தடுத்து மரணமடைந்து வருவது, சினிமா பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.