ராஜ் மற்றும் டிகே இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. அதே வேளையில் தமிழர்களை இழிவாக காட்டியுள்ளதாக கடும் சர்ச்சைகளும். எதிர்ப்புகளும் எழுந்தது. இந்நிலையில் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே, அமேசான் பிரைம் தளத்திற்காக இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா அலை தொடங்கியதில் இருந்து ஓடிடி தளங்களுக்கும், வெப் தொடர்களுக்கும் மவுசு அதிகமாகிவிட்டது. பாலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய மொழியில் உருவாகும் வெப் தொடர்களில் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்களும் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழிலும் முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் ஓடிடி தளங்களுக்காக படம் இயக்க, நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் அண்மையில் ‘தி ஃபேமிலி மேன்-2’ வெப் தொடர் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. சமந்தா அக்கினேனி நடிப்பில் வெளியான இந்த தொடரில் இலங்கை தமிழர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தமிழகத்தில் இருந்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வெப் தொடருக்கே தடை விதிக்க வேண்டும் என்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சன்னி லியோன் உடன் டூயட் ஆட தயாராகும் ‘டிக்டாக்’ ஜிபி முத்து: குஷியில் ரசிகர்கள்!
இந்நிலையில் ‘தி பேமிலி மேன்’ வெப் தொடர் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே அமேசான் ப்ரைம் தளத்திற்காக இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் ஷாகித் கபூரும், ராஷி கண்ணாவும் நடிக்க உள்ளனர். ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல் ‘மும்பைகார்’ கிஷோர் பாண்டுரங் இயக்கும் ‘காந்தி டாக்ஸ்’, அந்தாதூன் படஇயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஒரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.