70களில் மெட்ராஸில் இருக்கும் பாக்ஸர்கள் பற்றிய படம் தான் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை. முன்னாள் சாம்பியனான ரங்கன் (பசுபதி) பயிற்சி அளிக்கும் சார்பட்டா பரம்பரைக்கும், துரைக்கண்ணு(ஜி.எம். குமார்) பயிற்சி அளிக்கும் இடியாப்ப பரம்பரைக்கும் இடையேயான பகை தான் படத்தின் கரு.

இடியாப்ப பரம்பரையிடம் மோதி இழந்த புகழை மீண்டும் பெற முயற்சி செய்கிறது சார்பட்டா பரம்பரை. அம்மா பாக்கியத்தால் (அனுபமா குமார்) பாக்ஸிங்கை விட்ட கபிலன்(ஆர்யா) சார்பட்டா பரம்பரையின் கௌரவத்தை மீட்க யாராலும் தோற்கடிக்க முடியாதவரான வேம்புலியிடம்(ஜான் கொக்கன்) மோதுகிறர்.

முதல்பாதி பரபரப்பாக போகிறது. அடுத்து என்ன, அடுத்த என்ன என்று நம்மை நகம் கடிக்க வைக்கிறது. இரண்டு பரம்பரைகளுக்கு இடையேயான பகையை சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

முதல் பாதியே இந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது என்றால் இரண்டாம் பாதியை சொல்லவா வேண்டும் என்று எதிர்பார்த்து சென்றால் சற்று ஏமாற்றம் ஏற்படுகிறது.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் வந்தாலும் பசுபதி, அவரின் மகனாக நடித்திருக்கும் கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நம்மை கவர்கிறார்கள். டாடி எனும் ஆங்கிலோ இந்தியர் கதாபாத்திரத்தில் வரும் ஜான் விஜய் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்துவிட்டார்.

இரண்டாம் பாதியில் இது பாக்ஸிங் படம் என்பதை தாண்டிய சாதிய ஒடுக்குமுறை என்று பல விஷயங்கள் பற்றி பேசுகிறது. பாக்ஸிங்கில் வெற்றி பெறும் முன்பு தன் சாதி தொடர்பான பிரச்சனைகளை வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார் கபிலன்.

கபிலன் என்கிற தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை தான் கதை என்பது போன்றாகிவிடுகிறது இரண்டாம் பாதி. கபிலனின் மனைவி மாரியம்மாவாக துஷாரா விஜயன் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பாக்ஸிங்கையும் அரசியல் விட்டு வைக்கவில்லை. இறுதியில் ஜெயித்தது யார் என்பதை காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

கதை நடக்கும் காலகட்டத்தை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள். காஸ்டிங் மற்றும் ப்ரொடக்ஷன் டிசைன் குழுவை வாழ்த்தியே ஆக வேண்டும். கபிலன் மற்றும் இடியாப்ப பரம்பரையை சேர்ந்த டான்ஸிங் ரோஸுக்கு இடையேயான சண்டை தான் படத்தின் ஹைலைட்டே. அதை யாராலும் மறக்க முடியாது.

சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு பக்க பலம். ஆர்யா கபிலனாக மாற பட்ட கஷ்டத்தை திரையில் பார்க்க முடிகிறது.

sarpatta parambarai