சல்மான் கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் ராதே படத்திற்கு மோசமான விமர்சனம் எழுந்துள்ள நிலையில் அந்த படம் ஆன்லைனில் கசிந்துவிட்டது.

ராதே

பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்த ராதே படம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த 13ம் தேதி ஓடிடியில் வெளியானது. ராதே படம் சுமார் 40 நாடுகளில் வெளியிடப்பட்டது. சில நாடுகளில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தை பார்த்த சல்மான் கான் ரசிகர்கள் ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் என்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ மொக்கை, கொடூர மொக்கை என்கிறார்கள். சினிமா விமர்சகர்கள் ராதே படத்தை விளாசியுள்ளனர்.

ரம்ஜான் ராசி

ரம்ஜான் பண்டிகை சல்மான் கானுக்கு ராசியானதாக கருதப்படுகிறது. அதனால் தான் ராதே படத்தை ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்தார்கள். ஆனால் அது இப்படி சொதப்பும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் பிரபுதேவாவின் இயக்கத்தை விமர்சித்துள்ளனர். சல்மான் கான் இனி பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கவே கூடாது என்று தெரிவித்துள்ளனர். பிரபுதேவா படங்களை இயக்குவதை விட்டுவிட்டு டான்ஸ், நடிப்போடு நிறுத்திக் கொள்வது நல்லது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்

எந்த புதுப்படம் ரிலீஸானாலும் அதை உடனே ஆன்லைனில் கசியவிடும் தமிழ் ராக்கர்ஸ் சல்மான் கானின் ராதே படத்தையும் விட்டு வைக்கவில்லை. ராதே படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வந்துவிட்டது. படம் ரொம்ப மோசம் என்று விமர்சனம் எழுந்த நிலையில் ஜீ5ல் ரூ. 249 கொடுத்து பார்ப்பதற்கு பதில் அதை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தவர்கள் தான் அதிகம். மோசமான விமர்சனம், தமிழ் ராக்கர்ஸ் பிரச்சனை என்று சல்மான் கானுக்கு அடி மேல் அடியாக இருக்கிறது. தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

சல்மான் கான்

ராதே படத்தை பலரும் தமிழ் ராக்கர்ஸில் பார்க்கும் நிலையில் சல்மான் கான் தன் ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பைரசி தளங்களில் ராதே படத்தை பார்க்க வேண்டாம் என்று சல்மான் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி பார்த்தால் பல பிரச்சனையில் சிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஆனால் சல்மான் கான் பேச்சை சினிமா ரசிகர்கள் கேட்பதாக இல்லை.