பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் திருமணம் குறித்து புது தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதுவும் கதை தான் என்கிறார்கள் இந்தி சினிமா ரசிகர்கள்.

ராக்கி சாவந்த்

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். அவரை மோட்டார் வாய் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள். சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளை கிளப்பினார் ராக்கி. பிக் பாஸ் வீட்டில் தன் மனைவி ருபினா திலைக்குடன் தங்கியிருந்த நடிகர் அபிநவ் சுக்லா மீது ராக்கி சாவந்துக்கு காதல் ஏற்பட்டது. ஏற்கனவே திருமணமான ராக்கி இப்படி செய்தது பெரும் பிரச்சனையானது.

திருமணம்

தனக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷுக்கும் திருமணம் நடந்துவிட்டது என்று கூறினார் ராக்கி. மேலும் தான் திருமண உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். ஆனால் கணவரின் புகைப்படத்தை இதுவரை வெளியிடவில்லை. ராக்கியின் கணவர் ரித்தேஷை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. அதனால் தனக்கு திருமணாகிவிட்டதாக ராக்கி பொய் சொல்வதாகவே அனைவரும் நினைக்கிறார்கள்.

பணம்

பணக் கஷ்டமாக இருந்ததால் ரித்தேஷை திடீர் என்று திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். திருமணம் முடிந்த பிறகே ரித்தேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருப்பது தெரிய வந்தது என்றார் ராக்கி. இந்நிலையில் அவர் தன் திருமணம் குறித்து புது தகவல் வெளியிட்டுள்ளார். திருமணம் பற்றி ராக்கி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, குஜராத்தை சேர்ந்த டான் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். தன்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் என்னை கடத்திவிடுவேன் என்று மிரட்டினார். அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் ரித்தேஷ் அழைத்தார் என்றார்.

கட்டுக்கதை

ராக்கி தன் திருமணம் குறித்து ஒவ்வொரு முறையும் புதுக்கதை சொல்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த டான் கதையும் அப்படித் தான் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள். ராக்கி தன் அம்மாவின் மருத்துவ செலவுக்காகத் தான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாராம். மேலும் சல்மான் கானும், அவரின் தம்பி சுஹைல் கானும் ராக்கியின் அம்மாவின் சிகிச்சைக்கு நிதி அளித்து உதவி செய்திருக்கிறார்கள்.