கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் ‘டெடி‘ படம் வெளியானது. ஓடிடியில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் ஆர்யா மீண்டும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டிலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக்டிக்டிக் உள்ளிட்ட படங்கள் வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் ஓடிடி வெளியீடாக ஹாட் ஸ்டாரில் வெளியான ‘டெடி’ படமும் சக்தி சௌந்தர்ராஜனின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பால் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா மீண்டும் நடிக்கவுள்ள படம் ‘டெடி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் ஆர்யா பேசும் போது, இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் மீண்டும் தான் நடிக்கும் படம் ‘டெடி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது என்றும் இது ஒரு புதிய திரைக்கதை என்றும் முழுக்க முழுக்க தமிழ் சினிமாவுக்கு புதிதாக இந்த கதை இருக்கும் என்றும் இந்த படம் ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

நயன்தாரா பர்த்டே ஸ்பெஷல்: பிறந்தாளில் வெளியான புதிய பட அறிவிப்பு!
இந்நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது. ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் ’ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆர்யா ஜோடியாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுத உள்ளார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் டைட்டிலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘கேப்டன்‘ என பெயரிடப்பட்டுள்ள டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆர்யா, எனக்கு பிடித்த நபர், இயக்குனர் மற்றும் சகோதரருடன் இணைகிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இரண்டாவது முறையாக ஆர்யாவும், சக்தி செளந்தர்ராஜனும் இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அண்ணாத்தே’யில் சிவா சொல்லி அடித்துள்ளார் ; படம் மிகப்பெரிய வெற்றி – ரஜினிகாந்த் புகழாரம்!