ஹைலைட்ஸ்:

  • கொரோனா நிவாரண பணிக்காக 1 கோடி ரூபாய் வழங்கிய சிவக்குமார் குடும்பத்தினர்.
  • முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கிய அஜித் குமார்.
  • சூர்யா, அஜித்தை தொடர்ந்து கொரோனா நன்கொடையாக 1 கோடி வழங்கிய ரஜினிகாந்த்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, அதற்காக அனைவரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரபலங்களும், பொது மக்களும் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். நடிகர் சூர்யா, அஜித்குமாரை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக 1 கோடி வழங்கியுள்ளார். ஏற்கனவே நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்திக் மூவரும் இணைந்து முதலமைச்சரை சந்தித்து 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்கள். நடிகர் அஜித் குமார் 25 லட்சம் வழங்கினார்.

சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த தல: கொரோனா நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய அஜித் குமார்!
இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த், தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். புகைப்படத்திற்கு நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டார். கொரோனா வைரஸிற்கு எதிரான இந்த போரை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர் கொள்வோம் என கேப்ஷன் போட்டுள்ளார் சௌந்தர்யா.

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், சூரி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் வந்த நடந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.