ஹைலைட்ஸ்:

  • தனுஷ் எனக்கு தம்பி மாதிரி- ஆனந்த் எல் ராய்
  • தனுஷை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தவர் ஆனந்த் எல் ராய்
  • ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கும் தனுஷ்

கோலிவுட்டில் வளர்ந்த பிறகு ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். தனது நடிப்பால் இந்தி ரசிகர்களை அசர வைத்தார். யாருஜி இந்த நடிகர், எங்கிருந்து வந்தார் என்று பலரும் கேட்டார்கள்.

ஜூன் 21ம் தேதியுடன் அந்த ராஞ்சனா படம் ரிலீஸாகி 8 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்நிலையில் ஆனந்த் எல் ராய் தனுஷ் பற்றி பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அந்த பேட்டியில் ஆனந்த் எல் ராய் கூறியதாவது,

நான் முதல் முறையாக தனுஷை சந்தித்து கதை சொன்னதுபோது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. உங்கள் படத்தில் கண்டிப்பாக நடிக்கிறேன் என்றார். ஆனால் அவருக்கு இந்தி தெரியாதது தான் ஒரே பிரச்சனை. மொழி ஒரு பிரச்சனையே இல்லை, நான் கற்றுக் கொள்கிறேன் என்று கூறினார் தனுஷ்.

திரைத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் ரொம்ப சுயநலவாதிகள் என்பார்கள். ஆனால் ஒரு படம் முடிந்தாலும் அந்த கலைஞர்களுடன் டச்சில் இருக்க விரும்புபவன் நான். இத்தனை ஆண்டுகளாக நான் தனுஷுடன் தொடர்பில் இருக்கிறேன்.

அவர் எனக்கு தம்பி போன்றவர். நானும், அவரும் ஒருவர் மீது மற்றொருவர் அதிக பாசம் வைத்திருக்கிறோம். தனுஷ் எப்பொழுது மும்பைக்கு வந்தாலும் என் வீட்டில் தான் தங்க வேண்டும். அதனால் தான் அவரை மும்பையில் வீடு வாங்க நான் அனுமதிப்பது இல்லை என்றார்.

ராஞ்சனா படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. ராஞ்சனாவை அடுத்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அந்த படத்தில் சாரா அலி கான், அக்ஷய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அத்ரங்கி ரே படத்தை ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். தனுஷ் தற்போது தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இரண்டு வாரத்தில் ஷூட்டிங் முடிந்து சென்னைக்கு திரும்பிவிடுவாராம்.

4 மாதங்களாக அமெரிக்காவில் இருப்பதால் வீட்டு சாப்பாடை மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் வரும் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா-ஜோ ‘மகளை’ தனுஷ் ஹீரோயினாக பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள்