தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. கைவசம் அரை டஜன் படங்களுடன் பிசியாக திகழும் யோகி பாபு, பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் சென்னையில் யோகி பாபுவின் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடந்துள்ளது. அவருக்கு நெருக்கமான உறவுகள் இந்த விழாவில் கலந்துள்ளனர்.

நடிகர் யோகிபாபுவுக்கு மஞ்சு பார்கவி என்பவருடன் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திடீர் திருமணம் நடந்தது.அவரின் சொந்த ஊரான செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு கிராமத்தில் மிகவும் எளிமையாக முறையில் யோகி பாபுவின் திருமணம் நடந்து முடிந்தது. அதன் பின்னர் ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் எல்லோரையும் திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை’ என்று கூறி சென்னையில் நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக தன்னுடைய வரவேற்பு விழாவை நடத்த திட்டமிட்டிருந்தார்.

அதன்படி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி தேதிக்கு இரு தினங்களுக்கு முன்பாக கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி அவரால் ரிசப்சன் நடத்த முடியவில்லை. அதன்பின்னர் மனைவிக்கு கடந்த டிசம்பர் மாதம் வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதற்கு இரு தினங்களுக்கு முன்பாகவே யோகிபாபுவிற்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது.

நல்ல காலம் பிறந்தாச்சு: செப்டம்பரில் வெளியாகும் கெளதம் மேனனின் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’!
திருமணம், வரவேற்பு, வளைகாப்பு என திட்டமிட்ட எதுவுமே நடத்த முடியாமல் போனா நிலையில் இன்று தனது பிறந்தநாளில் தனது மகனுக்கு பெயர் சூட்டியிருக்கிறார். தன்னுடைய வீட்டிலே வைத்து நெருங்கிய உறவினர்களுடன் எளிமையான முறையில் விழாவை நடத்தியவர் தனது மகனுக்கு விசாகன் என பெயர் சூட்டியிருக்கிறார்.