கொரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே திரையரங்குகள் முற்றிலுமாக மூடப்பட்டன. இதனால் சென்ற ஆண்டு முதலே திட்டமிட்டபடி படங்களை நேரடியாக தியேட்டர்களில் வெளியிட முடியவில்லை. இதனால் திரைத்துறைக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்நிலையில் பெரிய பட்ஜெட் உட்பட பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி நோக்கி நகர துவங்கின.

மலையாளத்தில் த்ரிஷ்யம் 2, ஜோஜி உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இதனை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது.

மேலும் இந்த ஓடிடி தளத்தில் இருந்து வெளியாகும் படங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குனர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தான்: கொந்தளிக்கும் நடிகர் சூர்யா!
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பதிவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்களையும் டேக் செய்துள்ளார் சேரன்.