ஹைலைட்ஸ்:

  • கங்கை அமரன் மனைவி மணிமேகலை மரணம்.
  • திரையுலகை சேர்ந்தவர்கள் மணிமேகலை மறைவிற்கு இரங்கல்.
  • வெங்கட்பிரபுவிற்கு இரங்கல் தெரிவித்து சுரேஷ் காமாட்சி ட்விட்.

தமிழ்சினிமாவில் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக இயங்கி வருபவர் கங்கை அமரன். இவரின் மகன்கள் வெங்கட்பிரபு இயக்குனராகவும், பிரேம்ஜி நடிகராகவும் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கங்கை அமரனின் மனைவி மணிமேகலை கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்களின் முயற்சியால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

69 வயதான மணிமேகலையின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச் சடங்கு இன்று நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் மாநாடு திரைப்பட குழுவினர், அவரின் தாயாரின் மறைவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

‘பண்ணலன்னா உடனே திட்றோம், பண்ணா வெயிட் பண்ணி புகழனுமா’?: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு ட்விட்!
இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், அம்மா நமக்கு எவ்வளவு “பலம்”. பல நேரங்களில் அப்பாவுக்கும் நமக்கும் “பாலம்”. உங்களுக்கு அம்மா எவ்வளவு பலம் என்பதறிவேன். உணர்வால் அம்மாவோடு மிகவும் பிணைக்கப்பட்டவர் என்பதை கடந்த ஒருவாரமாகப் பார்த்து வருகிறேன். எப்படியாவது மீண்டு மீண்டும் வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன்.

தவறவிட்ட பொக்கிசம் என்றாலும், அவர்களின் ஆசியும்… அன்பும்… உங்களை பல வெற்றிகளை நோக்கி வழி நடத்தும். கூடவேயிருந்து நேசிக்கும். குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கங்கை அமரன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி மூவருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்விட்டை மேற்கோள்காட்டி நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆர்ஐபி அம்மா என பதிவிட்டுள்ளார்.