ஹைலைட்ஸ்:

  • இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.
  • பிரபல கதாசிரியர் மாதம்பு குஞ்சுக்குட்டன் கொரோனா காரணமாக காலமானார்.
  • மறைந்த மாதம்பு குஞ்சுக்குட்டனுக்கு மலையாள திரையுலகம் இரங்கல்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையுலகில் ஏற்படும் மரணங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குனர் கொரோனா காரணமாக மரணமடைந்து இருப்பது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளராகவும், நடிகராகவும், சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை தந்தவர் குஞ்சுக்குட்டன். கடந்த 2000ம் ஆண்டு வெளியான கருணம் படத்திற்கு சிறந்த திரைக்கதை எழுதியதற்காக தேசிய விருதை பெற்றார் மாதம்பு குஞ்சுக்குட்டன். ஜெயராஜ் இயக்கத்தில் பிஜு மேனன் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் மாதம்பு குஞ்சுக்குட்டனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட குஞ்சுக்குட்டன், திரிச்சூரில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குக்ன்சுக்குட்டன் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.

முன்னெச்சரிக்கையாக இருந்தும் விடாத கொரோனா: பிரபல நடிகை வேதனை!
இந்நிலையில் குஞ்சுக்குட்டன் மறைவு குறித்து நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக வலைதள டைம் லைன் முழுவதும் இரங்கல் தெரிவிக்கும் இடமாக மாறி வருகிறது. இந்த நிலை கூடிய சீக்கிரமே மாற வேண்டும். மலையாள திரையுலகின் சிறந்த கலைஞர் மாதம்பு குஞ்சுக்குட்டனையும் தற்போது இழந்து தவித்து வருகிறோம் என தன்னுடைய பதிவில் குஞ்சுக்குட்டன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள் தொடர்ச்சியாக மரணமடைவது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இயக்குனர்கள் கே.வி.ஆனந்த்யும், தாமிராவும் கொரோனாவிற்கு பலியானார்கள். இந்நிலையில் கொரோனாவிற்கு மேலும் ஒரு சினிமா பிரபலம் மறைந்துள்ளது, மலையாள திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.