ஹைலைட்ஸ்:

  • நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் மரணம்
  • ஐயப்பன் கோபி மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி
  • கோலிவுட்டில் அடுத்தடுத்து மரணங்கள்

காரைக்குடி அருகே இருக்கும் பள்ளத்தூரை சேர்ந்தவர் ஐயப்பன் கோபி. வங்கியில் வேலை செய்து வந்த அவருக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை. இதையடுத்து வங்கி வேலையை விட்டுவிட்டு நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.

கே. பாலசந்தரின் ஜாதிமல்லி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐயப்பன் கோபி. சூர்யாவின் ஆறு, காக்கி சட்டை, சதுரங்க வேட்டை, கருப்பன், என் ஆளோட செருப்பை காணோம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஐயப்பன் கோபி கடந்த மாதம் 24ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆனால் அந்த தகவல் தற்போது தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. கோபியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பால் திரையுலகினர் உயிரிழந்து வருகிறார்கள். மறுபக்கம் மாரடைப்பால் சிலர் இறக்கிறார்கள். சின்ன கலைவாணர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆரோக்கியமாக இருந்த விவேக்கிற்கு மாரடைப்பா என்று பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த உதவி இயக்குநர் பவுன்ராஜ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். திரையுலகை சேர்ந்தவர்கள் மாரடைப்பால் மரணம் அடைவது தொடர்கதையாகி வருகிறது.

இதையடுத்து இதயம் பத்திரம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்புக்கு வயது வித்தியாசம் எல்லாம் இல்லை. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 35 தான்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமான சேது, கொரோனா வைரஸ் பிரச்சனை நேரத்தில் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டார். இந்நிலையில் அவர் இறந்ததும் கொரோனா பாதிப்பு என்று பேச்சு கிளம்பியது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

கொரோனா நிவராண நிதிக்கு எந்தெந்த நடிகர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்?: விபரம் இதோ