ஹைலைட்ஸ்:

  • ஓடிடியில் கர்ணன் படம் பார்த்த ஆனந்த் எல் ராய்
  • கர்ணன் படத்தை பாராட்டி ட்வீட் செய்த பாலிவுட் இயக்குநர்
  • ஆனந்த் எல் ராய்க்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த கர்ணன் படம் கடந்த மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை அன்று கர்ணன் படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டனர்.

கர்ணனை தியேட்டரில் பார்க்காதவர்கள் அமேசான் பிரைமில் பார்த்து ரசித்துள்ளனர். கர்ணனை பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராயும் கர்ணன் படத்தை ஓடிடியில் பார்த்திருக்கிறார்.

படம் பார்த்த அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அருமை…கர்ணனை இப்படித் தான் விவரிக்க முடியும் மாரி செல்வராஜ். என்ன ஒரு கதாசிரியர். உங்கள் கருத்துகளை திரையில் காட்டிய விதம் சிறப்பு. தனுஷ் நீங்கள் ஒரு மாயாஜாலக்காரர். இதை நீங்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் ஒரு நடிகர் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.

ஆனந்த் எல். ராயின் ட்வீட்டை பார்த்த மாரி செல்வராஜும், தனுஷ் ரசிகர்களும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கர்ணன் பட வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் தனுஷ். அந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படப்பிடிப்பை அடுத்த ஆண்டு துவங்கவிருக்கிறார்கள்.

ஆனந்த் எல். ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் தான் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து ஆனந்த் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். அந்த படத்தில் அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஞ்சனா படம் ரிலீஸானபோது, பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்பை காட்டி மிரட்டும் இவர் யார் என்று இந்தி ரசிகர்கள் தனுஷை பற்றி வியந்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ரசிகர்களே, நீங்கள் பயந்தது மாதிரியே நடந்துடுச்சு