ஹைலைட்ஸ்:

  • தனுஷின் நுழைவு வரி வழக்கில் தீர்ப்பு வெளியானது
  • வரியை செலுத்த உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

வெளிநாட்டில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்தார் நடிகர் தனுஷ். அதற்கு ரூ. 60.66 லட்சம் நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று வணிக வரித்துறை உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2015ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் தனுஷ்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் தனுஷ் 50 சதவீத வரியை செலுத்தினால் அந்த காரை பதிவு செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.

அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இன்று தீர்ப்பு வழங்கினார். சொகுசு காருக்கான நுழைவு வரியை தனுஷ் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து திங்கட்கிழமைக்குள் வரியை செலுத்த தயார் என்று தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரி பாக்கியான ரூ. 30.30 லட்சத்தை 48 மணிநேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி விலக்கு வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழக்கில் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி சுப்பிரமணியம் தான் தனுஷ் வழக்கிலும் தீர்ப்பு வழங்குகிறார் என்பதை அறிந்தவர்கள் இன்றைய நாளை பெரிதும் எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபடியும் தப்பு பண்றீங்க விஜய் சேதுபதி: இது சரியில்ல ஆமாம்