இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹன்சிகா பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஹன்சிகா

இந்தி சீரியல்கள், படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன் கெரியரை துவங்கிய ஹன்சிகா தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் 25 குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பெண்களின் மருத்துவ செலவை ஏற்றுள்ளார்.

அம்மா

ஹன்சிகா சிறு பிள்ளையாக இருந்தபோதே அவரின் தந்தை பிரதீப் மோத்வானி குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து அம்மா மோனா தான் ஹன்சிகாவையும், அவரின் சகோதரரையும் வளர்த்து ஆளாக்கினார். ஹன்சிகாவின் அம்மா ஒரு தோல் மருத்துவர்.

அஹிம்சை

ஹன்சிகா ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பது இல்லை. பெரும்பாலும் காதலி கதாபாத்திரத்தில் தான் வருகிறார். அவருக்கு அஹிம்சை மீது அதீத நம்பிக்கையாம். தினமும் தியானம் செய்கிறாராம். தியானத்தால் தான் தன்னால் அமைதியாக இருக்க முடிகிறது என்கிறார் ஹன்சிகா.

கோவில்

ஹன்சிகாவுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹன்சிகாவை சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள் ரசிகர்கள். திருச்சி அருகே ஹன்சிகாவுக்கு கோவில் கட்ட ரசிகர்கள் முடிவு செய்தார்கள். இது குறித்து அறிந்த ஹன்சிகாவோ தனக்கு கோவில் கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த முடிவை ரசிகர்கள் கைவிட்டனர்.

காதல்

வாலு படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்தார் ஹன்சிகா. சுமார் ஓராண்டு காலம் காதலித்தனர். ஆனால் சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டனர். இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து மஹா படத்தில் ஹன்சிகாவும், சிம்புவும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஹன்சிகாவின் 50வது படம் மஹா என்பது குறிப்பிடத்தக்கது.