சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா படத்தின் சண்டைக்காட்சிகள் இணையத்தில் லீக்காகி இருப்பது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருவது மைத்ரி மூவி மேக்கர்ஸ். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது மைத்ரி மூவி. இந்நிலையில் இவர்கள் தயாரித்து வரும் மகேஷ் பாபுவின் ‘சர்காரு வாரி பாட்டா’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக்காகி வருகின்றன.

இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘சர்காரு வாரி பாட்டா’ மற்றும் ‘புஷ்பா’ படக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது எங்களை வெகுவாக பாதித்துள்ளது. சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களால் குரூர மகிழ்ச்சியைப் பெறுகின்றனர். எங்கள் ரசிகர்களின் மகிழ்ச்சியையும் இவர்கள் மொத்தமாக சிதைத்து விடுகின்றனர்.

அருண் விஜய்யின் ‘AV33’ படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!
மைத்ரி மூவி மேக்கரஸ் இந்தப் பிரச்சினையை முக்கியமானதாகக் கருதுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். சைபர் குற்றப் பிரிவில் நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைமில் புகார் கூறியுள்ளோம். அவர்களும் குற்றவாளிகளைப் பிடித்து கடுமையான தண்டனை தருவதாகக் கூறியுள்ளனர்.

நாங்கள் உங்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம். திருட்டுத்தனமாகத் திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்வது போல் பைரசி வேலைகளை ஊக்குவிக்காதீர்கள். திருடர்கள் ஒருநாள் பிடிபடுவார்கள் என எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.