நடிகை சோனம் கபூருக்காக ஒருவருடன் மோதப் போய் குத்து வாங்கி வீட்டிற்கு வந்தது தான் மிச்சம் என்று நடிகர் அர்ஜுன் கபூர் கூறியுள்ளார்.

சோனம் கபூர்

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மூத்த மகள் சோனம் இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். அவர் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு குடும்பத்தாரும், ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர் லண்டனில் வசித்து வருகிறார். லாக்டவுன் நேரம் என்பதால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. தன் தாய்நாட்டை மிகவும் மிஸ் செய்வதாக சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் கபூர்

சோனம் கபூரின் சகோதரரும், நடிகருமான அர்ஜுன் கபூர் பேட்டி ஒன்றில் கூறியதாவது, நானும், சோனம் கபூரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அப்பொழுது தான் பூசினாற் போன்று இருந்தேன். எனக்கு கூடைப்பந்து விளையாடுவது என்றால் பிடிக்கும், சோனுமுக்கும் தான். ஒரு நாள் சோனம் விளையாடியபோது சீனியர்கள் வந்து பந்தை வாங்கிக் கொண்டு இது எங்கள் நேரம் என்று கூறினார்கள் என்றார்.

கோபம்

பந்தை பறித்ததும் சோனம் அழுது கொண்டே வந்து, அந்த பையன் என்னிடம் மோசமாக நடந்து கொண்டான் என்றார். யார் அந்த பையன் என்று நான் கேட்டேன். நான் அடிதடி பார்ட்டியே இல்லை. சிறுவயதிலும் சரி, தற்போதும் சரி. ஆனால் எனக்கு கோபம் வரும். சோனம் சொன்னதை கேட்டு கோபப்பட்டு அந்த பையனை பார்க்க சென்றேன். அந்த பையனை பார்த்ததும் கண்டபடி திட்டினேன். அவன் எதுவும் சொல்லாமல் என்னையே பார்த்தான் என்றார் அர்ஜுன் கபூர்.

சண்டை

அர்ஜுன் கபூர் மேலும் கூறியதாவது, அந்த பையன் எதுவும் பேசவில்லை மாறாக ஓங்கி என் முகத்தில் குத்தினான். என் கண் பகுதி சிவப்பாகிவிட்டது. அதை பார்த்த சோனம் என்னிடம் சாரி சொன்னார். என்னை குத்திய பையன் தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றவன். அவன் ஒரு பாக்சர். சோனமுக்காக நான் தப்பான பையனிடம் போய் மோதிவிட்டேன். குத்து வாங்கிய பிறகு டாக்டரிடம் சென்றேன். அந்த பையனை மோமசாக திட்டியதால் என்னை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்கள். அதன் பிறகு நான் சோனமிடம், இனிமேல் பள்ளியில் உன்னை நீயே கவனித்துக் கொள், என் பெயர் கெட்டுவிட்டது, இனியும் என்னால் முடியாது என்றேன் என்றார்.