ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிடும். தற்போது 2021ஆம் ஆண்டிற்கு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அதில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

கடந்த பொங்கலுக்கு விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. . கொரோனா முதல் அலைக்குப் பின் திரையரங்கில் வெளியாகி, தியேட்டர் உரிமையாளர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் நம்பிக்கை அளித்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது.

நான் வில்லனா? சான்ஸே இல்லை: நடிகர் மாதவன் விளக்கம்!
இந்நிலையில் ஐஎம்டிபி இணையதளத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளது மாஸ்டர் திரைப்படம். இந்தப் பட்டியலில் திரைப்படங்களோடு, வெப் சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஐஎம்டிபி ப்ரோ தளத்தின் தரவுகள், அந்தந்த திரைப்படங்களின் இணையத்தள பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளன ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பட்டியல் தயார் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மம்முட்டியின் ‘த்ரிஷ்யம் 2’, தனுஷின் ‘கர்ணன்’ உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸும் இதில் இடம்பெற்றுள்ளது.