தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. தற்போது இருபதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்‘ படத்தின் படப்பிடிப்பிற்காக புதுச்சேரியில் இருக்கும் விஜய் சேதுபதி, அம்மாநில முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பேரும் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது.

இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக புதுச்சேரியில் தங்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, மரியாதை நிமித்தமாக அம்மாநில முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன்.

‘மாநாடு’ பட தயாரிப்பாளருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்: அப்டேட் கேட்கும் சிம்பு ரசிகர்கள்!
இந்த சந்திப்பின் போது, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து வந்த நிலையில், தற்போது 28ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறியுள்ளார். இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால், கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜய்சேதுபது கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பரிசீலனை செய்வது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமியும் உறுதி அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசி விவசாயி, லாபம் உள்ளிட்ட படங்கள் தயாராகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. இதில் துக்ளக் தர்பார் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது தவிர பாலிவுட்டிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.