கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் அப்பு என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். புனீத் ராஜ்குமார் மறைவை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அனைவரும் கண் தானம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

46 வயதான புனீத் ராஜ்குமார் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அவரது மறைவு செய்தியைக் கேட்டதும் கர்நாடக மாநிலமே கண்ணீர் கடலில் மூழ்கியது. அவருடைய ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனீத் மரணம் அடைந்தாலும், அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதற்க்கு முன்பாக தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனீத் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக நவீன மருத்துவ முறைகள் உதவியுடன் 4 கன்னட இளைஞர்களுக்கு பார்வை கிடைத்துள்ளது.

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் மோதும் பிரபல நடிகர்: வைரலாகும் புகைப்படம்!
புனித் ராஜ்குமார் கண் தானம் செய்ததைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் அனைவரும் கண் தானம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவமனையில் மட்டும் 15 நாட்களில் 78 பேர் தங்களது கண்களை தானம் செய்திருக்கிறார்கள். அந்த மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 100க்கும் குறைவானவர்களே சராசரியாக கண் தானம் செய்து வந்துள்ளனர். ஆனால் புனீத் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு 15 நாட்களில் 78 பேர் தாங்களாகவே வந்து கண்களை தானம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு கடந்த 15 நாட்களில் மட்டும் கர்நாடக மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கண்களை தானம் செய்ய பதிவு செய்திருப்பதாக மருத்துவமனைகள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. புனீத் மறைந்தாலும் அவர் செய்த கண் தானத்ததை, முன் உதாரணமாக கொண்டு, பல பேரை வாழ வழிவகை செய்துள்ளார் என்பது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நீ இல்லையென்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை புனீத்!