மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து வருகிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியன் செல்வன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தாய்லாந்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

ஆர்யா இல்லையாம்: ராம் போதினேனிக்கு வில்லனாக ஆதியை டிக் செய்த லிங்குசாமி!
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் துவங்கியது. இந்நிலையில் இந்தப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. போஸ்டரில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது என்பதை உறுதி செய்துள்ளனர். முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் இனையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது