மயில்சாமியின் பிறந்தநாளுக்கு ஆர்டிகிள் 15 படக்குழுவுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஆர்டிகிள் 15 ரீமேக்

-15-

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ஆர்டிகிள் 15 இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்க சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. அந்த படத்தில் நடித்து வரும் மயில்சாமி தன் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாடினார்.

மயில்சாமி

தன் பிறந்தநாளை முன்னிட்டு 300 குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தார் மயில்சாமி. வழக்கமாக அவர் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. இம்முறை படப்பிடிப்பு தளத்தில் முதல்முறையாக கேக் வெட்டி கொண்டாடினார். மயில்சாமிக்கு உதயநிதி ஸ்டாலின் கேக் ஊட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. அதில் உதயநிதி ஸ்டாலின் ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

பிரியாணி

மயில்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். கொரோனாவால் மனைவியை இழந்த அருண்ராஜா காமராஜை செட்டில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்துங்கள். அது தான் உங்களுக்கு தற்போது இருக்கும் பெரிய ஆறுதல் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்

முழு நேர அரசியலில் ஈடுபட நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளாராம் உதயநிதி ஸ்டாலின். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடப் போகிறாராம். மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தான் உதயநிதிக்கு வில்லன் என்று கூறப்படுகிறது.