9 இயக்குநர்கள், 9 குறும்படங்கள் என பிரம்மாண்டமாக ‘நவரசா’ எனும் தலைப்பில் உருவாகியுள்ளது மணிரத்னம் தயாரிக்கும் ஆந்தாலஜி மூவி. நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அண்மையில் வெளியான நவரசா படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

சென்ற லாக்டவுனில் புத்தம் புது காலை, பாவக்கதைகள், குட்டி ஸ்டோரி உள்ளிட்ட ஆந்தாலஜி திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனால் பல இயக்குனர்கள் ஆந்தாலாஜி திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். அந்த வரிசையில் இயக்குனர் மணிரத்னம் ஜெயேந்திர பஞ்சாபகேசனுடன் இணைந்து நவரசா ஆந்தாலஜி மூவியை உருவாக்கி வருகிறார்.

கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன் பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கி வருகின்றனர். இதில், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த 9 கதைகளில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளது நவரசா.

ஜிவி பிரகாஷுடன் இணையும் விஜய் சேதுபதியின் பேவரைட் ஹீரோயின்!
இந்நிலையில் நவரசாவில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘ப்ராஜக்ட் அக்னி’ படம் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். அதில், ‘நவரசா’ படத்தைப் பொறுத்தவரை அதன் அத்தனை அம்சங்களுமே எனக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத்தந்த பெரிய பயணம் ஆகும். இப்படம் சயின்ஸ் பிக்சன் வகையில் ஒரு புதுமையான கனவு முயற்சி. இப்படத்துக்காக முதலில் நான் அரவிந்த் சாமி மற்றும் பிரசன்னா ஆகிய இருவரை தொடர்புகொண்டேன். அவர்கள் இருவருடனும் ஏற்கனவே நான் பணிபுரிந்துள்ளேன்.

அரவிந்த சாமியைப் பொறுத்தவரை அவர் படப்பிடிப்பில் காட்சியைத் தனது நடிப்பின் மூலம் நிறைய மேம்படுத்துவார். கதாபாத்திரங்களைச் சரியாக வெளிப்படுத்தும் பொருட்டு, அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா ஆகியோர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டனர். அனைத்து நடிகர்களும் இத்திரைக்கதையில் அழகாகப் பொருந்தியுள்ளார்கள். இதனால் படம் மிக அற்புதமாக வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.