முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 எனத் தொடர்ச்சியாக ஹாரர் காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்டவர் ராகவா லாரன்ஸ். கடைசியாக ‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் நடிப்பில்’லக்ஷ்மி’ என்ற பெயரில் இந்தியில் இயக்கினார். இந்நிலையில் தான் அடுத்து இயக்கும் புதிய படத்திற்கு துர்கா என பெயரிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

முனி சீரிஸ் படங்களை தொடர்ச்சியாக இயக்கி வந்ததுக்கு பலரால் லாரன்ஸ் ட்ரோல் செய்யப்பட்டாலும், இவரின் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இவரின் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்தது. இடையில் நடிப்பில் கவனம் செலுத்திய லாரன்ஸ் தற்போது மீண்டும் இயக்கத்திற்கு திரும்பிவிட்டார்.

தனது முனி சீரிஸ் போல தான் இயக்கும் புதிய படத்தை ஹாரர் பாணியில் எடுக்கவுள்ளார் லாரன்ஸ். துர்கா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அந்த போஸ்டரில் நீண்ட தாடி மற்றும் மீசையுடன் வயதான சாமியார் போல காட்சியளிக்கிறார் லாரன்ஸ். இதனை தொடர்ந்து செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

‘வலிமை’ படத்தின் அடுத்த பாடல் விரைவில் ரிலீஸ்: யுவன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!
இந்த படத்தை லாரன்சின் ராகவேந்திரா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘முனி சீரிஸின்’ ஒரு பகுதியாக இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன. ஆனால் படம் தொடர்பான மற்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் தற்போது கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதுதவிர துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ‘அதிகாரம்’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுதுவது குறிப்பிடத்தக்கது.