தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் பெண்கள் காவலர்களை சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வைக்க வேண்டாம் என உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு பெண்கள் அமைப்பினரும், பொது மக்களும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படத்தில் பெண் போலீசார் ஒருவர் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பவற்றை தெளிவாக அந்த படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். விமர்சனரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம்.

பொதுவாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பயணம் மேற்கொள்ளும்போது சாலைகளில் இடையூறு ஏற்படாத வண்ணம் போகும் வழித்தடங்களில் தமிழ்நாடு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள். ஆண், பெண் பேதமின்றி அனைவரும் இந்த பணியில் ஈடுபடுவார்கள். ஒரு இடத்தில் 12 மணி நேரம் மேல் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் பெண் காவலர்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாவார்கள்.

சமூக வலைத்தளத்தில் வெடித்த சர்ச்சை பேச்சு: மருத்துவரின் மன்னிப்பை ஏற்க மறுக்கும் சின்மயி!
இந்நிலையில் தான் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம்; அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த உத்தரவையடுத்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவாக பெண் காவலர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஆணையிட்டிருக்கிறார்.

இந்நிலையில் சாலை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் படும் அவஸ்தைகளை எடுத்துச்சொல்லும் விதமாக ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இயக்கியிருந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் “மிகமிக அவசரம்” படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமை கொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.