சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் துவங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவதற்கு முன்பே பல்லாயிரக்கணக்கான நபர்கள், பிரபலங்கள் பேரில் இருக்கும் கணக்கை பின் தொடர ஆரம்பித்து விடுகின்றனர். இந்நிலையில் நடிகர் சார்லி பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் திகழ்பவர் சார்லி. இந்நிலையில் அண்மையில் சார்லி பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் “இந்த ட்விட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்ற பதிவு வெளியாகியிருந்தது. இதை வைத்து அந்த கணக்கை நடிகர் சார்லி என நினைத்து பலரும் பின்தொடர தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகர் சார்லி, தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு துவங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சார்லி, ட்விட்டர், முகநூல் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் தான் இதுவரை கணக்கு துவங்கவில்லை எனவும், தனது பெயரில் ட்விட்டரில் போலியான கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக நண்பர்கள் மூலம் அறிந்து சென்று பார்த்தபோது, பல்லாயிரக்கணக்கானோர் அந்த கணக்கை பின் தொடர்ந்து வாழ்த்தி வரவேற்றிருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார்.

தனுஷ் படத்தில் விஜய்யா…?: ரசிகர்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்த சந்தோஷ் நாராயணன்!
மேலும், கடந்த 40 ஆண்டு காலமாக தனது துறை மட்டுமல்லாது தனது அன்பிற்குரிய அனைவரும் தன்னுடன் நேரடித் தொடர்பில் தான் இருந்து வருவதாகக் கூறிய அவர், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளக் கணக்குகளை இதுவரை பயன்படுத்தும் அவசியம் தமக்கு ஏற்படவில்லை என்றும் கூறினார்.

மேலும், தனது நண்பர்கள் அறிவுறுத்தலின் பேரில் தன் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்கை துவங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும், புகார் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி கணக்கை பின் தொடர்வதை தனது ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் நடிகர் சார்லி.