நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வலிமை படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் வலிமை படம் தொடர்பான அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரித்து வந்தனர் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் அண்மையில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை கொண்டாடி தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து ‘நாங்க வேற மாறி’ என்ற பர்ஸ்ட் சிங்கிளும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

19 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் வெற்றிக்கூட்டணி: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்நிலையில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கு முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க உள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி ‘அண்ணாத்த’ படமும் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரே நாளில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.