தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அவரின் இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கில் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். இந்நிலையில் இந்த விவகாரத்தில் காருக்கான நுழைவு வரியாக, 40 லட்சம் ரூபாயை நடிகர் விஜய் செலுத்தியுள்ளதாக வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை வாங்கினார். இந்தக் காருக்கு நுழைவுவரி செலுத்தாத காரணத்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவுசெய்யப்படவில்லை. அதையடுத்து விஜய் வாங்கிய அந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தவிட்டார் தனி நீதிபதி. அதனை தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்தும், தன்மீதான விமர்சனத்தை நீக்குமாறும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் விஜய்.

சிம்புவிற்காக கன்னட நடிகையை களமிறக்கும் கெளதம் மேனன்: இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் 1 லட்சம் அபராதம் விதிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் “தனி நீதிபதியின் கருத்துகளை நீக்குவது பற்றி நான்கு வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும் எனவும், விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை, வணிக வரித்துறை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.

இந்நிலையில் நுழைவு வரியாக, 40 லட்சம் ரூபாய் வரை நடிகர் விஜய் செலுத்தியுள்ளதாக வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், 8 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்த விஜய், தற்போது மீதமுள்ள 32 லட்சம் ரூபாயையும் முழுமையாக செலுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.