நடிகர் சூர்யா வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில் இந்த வழக்கில் மனு தள்ளுபடி செய்யப்பட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சூர்யா தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை தொடர்பாக வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சூர்யா. இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், 2007-08, 2008-09ஆம் ஆண்டுளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது.

ஆனால் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரி விலக்குச் சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி, கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும், ஆனால், சூர்யா தாமதமாகத்தான் கணக்கைத் தாக்கல் செய்தார். வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை. சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லை என வருமான வரித்துறை சார்பில் வாதிடப்பட்டது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் யோகி பாபு: வைரலாகும் ‘வீரப்பனின் கஜானா’ போஸ்டர்!
இதனையடுத்து வருமான வரித்துறையின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சூர்யா தரப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சூர்யா தரப்பு, வருமான வரிக்கு வட்டி ஏற்கனவே செலுத்திவிட்டோம் எனவும், வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யவுள்ளதாக சூர்யா தரப்பு விளக்கமளித்திருக்கிறது. இந்த வழக்கில் தாங்கள் வெற்றியடைந்தால் ரூபாய் 56,00,000 எங்களுக்கு திரும்ப கிடைக்கும் எனவும் சூர்யா தரப்பு விளக்கம் தெரிவித்துள்ளது.