நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாக அஜித்குமார், எச் வினோத், போனி கபூர் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் வலிமை திரைப்படம் தொடர்பான அப்டேட் கேட்டு அனைவரையும் நச்சரித்து வந்தனர் அஜித் ரசிகர்கள்.

இந்தாண்டு சமூக வலைத்தளத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தை வலிமை அப்டேட் என சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் தொடங்கி, கிரிகெட் வீரர்கள் வரை அனைவரிடமும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு அதிர வைத்தனர் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் அண்மையில் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை கொண்டாடி தீர்த்தனர்.

பொற்காலம் திரும்புகிறது: இணையத்தில் வைரலாகும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர்!
இந்நிலையில் இயக்குனர் எச் வினோத்தின் பணிகள் பிடித்திருப்பதால் மூன்றாவது முறையாக அவர் இயக்கத்திலே அஜித் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளன. மேலும் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் தேர்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ’வலிமை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தல 61 படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக வலிமை திரைப்படத்திற்கு முன்பாகவே தல 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.