புனீத் ராஜ்குமார் இறந்த செய்தி அறிந்து இரண்டு நாட்களாக தூக்கம் இல்லாமல் தவித்ததாக விஷால் கூறியிருக்கிறார்.

புனீத் ராஜ்குமார்

கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். புனீத் சத்தமில்லாமல் பலருக்கு உதவி செய்து வந்த விஷயம் அவர் இறந்த பிறகே தெரிய வந்தது. இவ்வளவு நல்ல மனிதரையா கடவுள் சீக்கிரமாக அழைத்துக் கொண்டார் என்று வேதனைப்படாதவர்களே இல்லை எனலாம்.

விஷால்

பெங்களூர் கண்டீரவா ஸ்டுடியோஸில் இருக்கும் புனீத் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் விஷால். மேலும் புனீத்தின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தாரை சந்தித்து பேசினார். புனீத் பற்றி விஷால் கூறியதாவது, புனீத் ராஜ்குமாரின் மரண செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிகவும் திறமையான நடிகர் என்றார்.

கல்வி

புனீத் இறந்த பிறகு இரண்டு நாட்களாக தூக்கம் இல்லாமல் தவித்தேன். எனக்கு சொந்தமாக வீடு இல்லை. அதனால் வீடு வாங்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து வைத்திருக்கிறேன். எப்பொழுது வேண்டுமானாலும் வீடு வாங்க முடியும். புனீத் நடத்தி வந்த சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன் என்றார் விஷால்.

விளம்பரம் இல்லை

புனீத் விட்டுச் சென்ற நல்ல காரியங்களை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு வாய்ப்பு கொடுங்கள். சமூக சேவைகளை வெளியே தெரியாமல் செய்து வந்தார் புனீத். விளம்பரத்திற்காக நான் இந்த கல்வி செலவை ஏற்கவில்லை. அவரின் நல்ல சேவையை தொடர வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இதை செய்கிறேன் என்று விஷால் கூறினார்.