தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வரும் நடிகை ஹன்சிகாவின் நடிப்பில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படமாக ‘மஹா‘ உருவாகியுள்ளது. சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள “105 மினிட்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றிலிருந்து துவங்கியுள்ளது.

“105 மினிட்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள ஹன்சிகா நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கப்படவுள்ளது. சைக்கலாஜிகல், திரில்லராக உருவாகும் இந்த திரைப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு, ஒரே கதாப்பாத்திரம் நடிக்கும் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்த படம் படைக்கவுள்ளது.

கடந்த மே மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாம் அலை, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிலிருந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக நடிகை ஹன்சிகா மோத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மிஷ்கினின் பிசாசு 2 திரைப்படத்தில் இணையும் இளம் நடிகை: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த படம் குறித்து நடிகை ஹன்சிகா பேசும் போது, தெலுங்கு திரையுலகில், முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை கொண்ட இப்படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரமாக நான் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சி. இயக்குநர் ராஜா துஷ்ஷா என்னிடம் கதை கூறியபோது மிகவும் வித்தியாசமாக, ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. திரைக்கதை பரபரப்புடன் திரில் பயணமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்ததாக அழகாக உருவாக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வீட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இளம்பெண்ணை பற்றிய த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாக உள்ளது. ‘105 மினிட்ஸ்‘ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் நீளமும் 105 நிமிடங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பொம்மக் சிவா தயாரிக்க உள்ளார். தமிழில் “இரவின் நிழல்” திரைப்படம் மூலம் சிங்கிள் ஷாட் திரைப்பட முயற்சியை ஏற்கனவே பார்த்திபன் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.