இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ரியங்கா சோப்ரா

உலக அழகிப் பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா, விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு அவர் பாலிவுட்டில் கஷ்டப்பட்டு முன்னேறினார். பாலிவுட்டின் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்ற பிறகு ஹாலிவுட் பக்கம் சென்றார். தற்போது அவர் ஹாலிவுட் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் ப்ரியங்கா சோப்ராவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் Happy Birthday Priyanka Chopra என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

நிக் ஜோனஸ்

ஹாலிவுட் சென்ற இடத்தில் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ப்ரியங்கா. திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். ப்ரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர் நிக். இதனால் அவர் ஒரு குழந்தையை திருமணம் செய்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்த சம்பவம் நடந்தது உண்டு.

காதல்

நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டது குறித்து ப்ரியங்கா தன் சுயசரிதையில் குறிப்பிட்டதாவது, விருது விழா ஒன்றுக்கு பிறகு தான் நானும், நிக்கும் நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். நிக்கை காதலிக்க முதலில் தயங்கினேன். திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஒருவருடன் இருக்க விரும்பினேன். அவருக்கு 25, எனக்கு 35 வயது. அதனால் அவர் விரைவில் செட்டிலாக விரும்பமாட்டார் என்று நினைத்தேன்.

அம்மா

நிக் முதல்முறையாக இந்தியாவுக்கு வந்தபோது என் அம்மாவுடன் வெளியே சென்றார். மதிய உணவு சாப்பிட அவர்கள் ஹோட்டலுக்கு சென்றார்கள். நான் வேலைக்கு சென்றுவிட்டேன். ஆனால் எனக்கு வேலையே ஓடவில்லை. நிக் ஏன் என் அம்மாவை மட்டும் தனியாக அழைத்துச் செல்ல வேண்டும்?. அவர்கள் என்ன பேசுவார்கள் என்றே யோசித்துக் கொண்டிருந்தேன்.

அனுமதி

அன்று மதியம் நான் ஒரு மீட்டிங்கில் இருந்தேன். என்னை சுற்றி 20 பேர் இருந்தார்கள். ஆனால் நான் நிக் மற்றும் என் அம்மா பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். என்னால் சஸ்பென்ஸை தாங்க முடியவில்லை. இதையடுத்து என் பாதுகாப்பு டீமில் இருக்கும் ஒருவரை அனுப்பி நிக், அம்மாவை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுக்கச் சொன்னேன். அவர்களின் பாடி லாங்குவேஜை வைத்து என்ன பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க நினைத்தேன். உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், அனுமதி கொடுப்பீர்களா என்று நிக் கேட்டது பின்பு தான் தெரிய வந்தது என்றார் ப்ரியங்கா.